கடந்தகாலமற்ற மனிதன்
-----
2007 இல்தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது...
காலச் சமன்பாடு பற்றி ஒரு நிறுவல் செய்ய
முயற்சி செய்து கொண்டிருந்த, 40 வயதான கணிதன் தன் வேலையில் ஒரு அலுப்புத் தட்டவே புத்தக
அடுக்குகளில் சும்மா தேடி ஒரு நூலைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினான்..
அது, 1933 இல் ஜெர்மனை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லரின் போர் வரலாறு.. அதில் ஹிட்லர் செய்த படுகொலைகள்
பற்றி விலாவரியாக எழுதப்பட்டிருந்தது.. இதை வாசிக்க வாசிக்க கணிதனுக்கு சர்வாதிகாரி ஹிட்லர் மீது கடும் கோபம் வந்தது..இந்நூலை
எழுதிய நூலாசிரியரின் பெயரைப் பார்த்தவன் திடுக்கிட்டு விட்டான்.. ஏனெனில், நூலாசிரியர் பெயர் கணிதன் என்று அவனது
பெயர் இருந்தது.. நாம் எப்போது இந்தப் புத்தகத்தை
எழுதினோம் என்றே அவனுக்கு விளங்கவில்லை..
ஆத்திரத்துடன், புத்தகத்தை மேலும் வாசிக்காமல்
தூக்கி எறிந்த கணிதன் மீண்டும் தன் வேலையில் ஈடுபட்டான்.. எனினும், தான் எழுதாத,
எழுதிய ஞாபகமே இல்லாத அந்நூல் பற்றியும், ஹிட்லர் பற்றிய நினைவுகளும் அவனை அலைக்கழித்தன. கொஞ்சம் பயமுறுத்தின..
உடனே, தன் வேலைத்தளத்தை விட்டும் வெளியே வந்த
கணிதன் அடுத்த தளத்துக்குள் சும்மா நுழைந்து பார்த்தான்.. அங்கே, ஒரு முதியவர் ஏதோ
ஒரு எந்திரம் அருகே நின்றுகொண்டு சின்னச் சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்தார். அது, விலைகூடிய மேக்நோட்டியம் என்னும் உலோகத்தால்
அமைக்கப்பட்டிருந்தது, அதன் முன்முகம் ஒரு பெண் முகம் போல அமைக்கப்பட்டு இருந்தது, பக்கத்தே, கழுகுகளின், சிறகுகள் போல இரு இறக்கைகள் விரிந்தும் ஒடுங்கியும்
இருந்தன.. அடியில், ஒரு குதிரையின் கால்கள் போன்ற அமைப்பில், நான்கு நிலைநிறுத்திகள் இருந்தன. பார்ப்பதற்கு மனிதன், பறவை, மிருகம் ஆகிய மூன்று உருவங்களின் அமைப்பில், விசித்திரமாக காட்சி தந்தது அந்த எந்திரஉருவம்.
இவன் உள்ளே வந்த ஆளவரம் கேட்டதும் முதியவர் திரும்பினார்.
‘இதன் பெயர் ‘பர்க்’.. அதாவது நம் மொழியில் மின்னல் என்று
அர்த்தம்’’ என்று இவன் கேட்காமலே சொன்னார்
அந்த முதியவர்...
‘இது எதற்கான இயந்திரம் பெரியவரே?’ என்று கேட்டான் கணிதன்.
‘இது காலரதம்களில் எல்லாம் மிகவும் அதி தொழினுட்பத்தில் உருவானது.. விண்வெளி
ஓடங்களில் இது மிகத் துல்லியமானது., காலத்தில் பின்னோக்கி பயணிக்க கூடியது..அல்லது
சுழலின் திசையைப் பொறுத்து முன்னோக்கியும் செல்லலாம்.. . இருப்பினும், திண்மை மற்றும் வேகம் ஆகியவற்றிற்கு அசாதாரண பருண்மைகள் கொண்டதால், இது வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.. அதற்காகத்தான் முயற்சித்துக்
கொண்டிருந்தேன்..வெற்றியும் அடைந்தேன். இது போன்ற ஒரு சாதனம் பேரண்ட இழையை மீறிச் செல்லும்.
இதை போல ஒன்றை இதற்கு முன் யாரும் உருவாக்கி இருப்பதாக தெரியவில்லை , ஒளி
வேகத்தில் இது பயணிக்கும்.. இதில் ஏறிக், கடந்த காலத்துக்கு இலகுவில், ஒளி வேகத்தில்,
சென்று வர முடியும் .’
‘இதில் 1900 களுக்குச் செல்ல
முடியுமா பெரியவரே..’
‘முடியும்.. காலத்துக்குப் பின்னோக்கி
எத்தனை ஆண்டுகளுக்கும் செல்ல முடியும்.. முன்னோக்கிச் செலுத்தும் முயற்சியில்தான் நான்
முயன்று கொண்டு இருக்கிறேன்..’
‘நான் 1900 களுக்குச் செல்ல
விரும்புகிறேன் பெரியவரே..’
‘ஏன் குறிப்பாக 1900?’
‘நான் ஹிட்லரைக் காண வேண்டும்.
அவரைக் கொல்ல விரும்புகிறேன்.’
‘’உன் விபரீதமான நோக்கம் நிறைவேறாது என்றே
நினைக்கிறேன்.. அது உன்னால் முடியுமோ தெரியாது.. எனினும் முயற்சி செய்து பார்...
இதில் ஏறு’
மறக்காமல் ஒரு லேசர்க் கைத்துப்பாக்கியையும்
எடுத்துக் கொண்ட கணிதன் அதற்குரிய உடைகளையும் அணிந்து கொண்டான். . முதியவர், இவனை விசித்திரமாகப் பார்த்தபடியே, 1900 களுக்குச் செல்லும் ஆளிகளை இயக்கினார்..
அடுத்த கணத்தில், கணிதன், ‘பர்க்’கில் ஏறிப்
பறந்தான். சர்வாதிகாரிக்கு என் கையால்தான்
சாவு.. இதோ வருகிறேன் அடோல்ப் ஹிட்லரே...
௦௦
1933 ஜனவரி 30.. ஹிட்லர் நாசிப் படைகளின் மத்தியில் உரை
நிகழ்த்திக் கொண்டிருந்தார்.. .. காலரதமான
‘பர்க்’ மிகச் சரியாக ஹிட்லரின் தலைக்கு,
ஐம்பது அடிகள் மேல் வந்து நிலையாக நின்றது.
உடனே, கணிதன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து ஹிட்லரைக் குறி வைத்தான். விசையை அழுத்தப்
போகும் ஒரு கணத்தில் ஹிட்லரின் முகத்தைப் பார்த்தவன் மிக அதிர்ச்சியில் உறைந்து போனான்.. காரணம் அங்கு இராணுவ உடையுடன், நாஜித் தொப்பி அணிந்து உரை நிகழ்த்திக் கொண்டிருந்தது
அவன்தான்.. ஆம், கணிதன்தான்...
விசித்திரமான ஒரு அதிர்ச்சியுடன், அங்கு
ஹிட்லர் என்ற பெயரில் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த
தன்னையே ஒருகணம் பார்த்தான். சுட்டால், நானே இறந்து விடுவேனோ என்ற பயத்தில் ஒரு
கணம் தயங்கினான். ஆனால், வருவது வரட்டும் என்ற துணிவுடன் , லேசர் துப்பாக்கியை எடுத்து ஹிட்லர் என்னும் தன்னை
நோக்கிச்
சுட்டான் கணிதன். ஆனால், அந்த லேசர் கதிர்க் குண்டினால், எந்த ஒரு பாதிப்பும் ஹிட்லருக்கோ அல்லது தனக்கோ ஏற்படவில்லை என்று கண்டான். அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார்.
ஏன் அப்படி? வெகுண்டெழுந்த கணிதன் மீண்டும்
மீண்டும் சுட்டான்... ஆனால் எந்த ஒரு சலனமும் ஹிட்லரில் ஏற்பட்டிருக்கவில்லை.
கோபத்தின் உச்சத்தில், கணிதன் ‘பர்க்’கை விட்டு ஒரே பாய்ச்சலில் ஹிட்லர் என்னும்
தன் தலையின் மீது தானே குதித்தான்.
ஹிட்லர் தன் தலையைத் தடவி விட்டபடி, உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவன் ஒருத்தன்
குதித்ததையே அவர் சட்டை செய்யவில்லை போல இருந்தது.. படைகளும் இவனைக் கண்டுகொள்ளவேயில்லை.
எக்காரணம் கொண்டும் எதனாலும் தான் என்னும்
ஹிட்லரைக் கொல்ல முடியாதென்று இறுதியில்,
உணர்ந்தான் கணிதன். அளவுகடந்த வெப்புசாரத்துடனும் பச்சாதாபத்துடனும் மீண்டும், ‘பர்க்கில்’
ஏறி 2007 க்குத் திரும்பினான் கணிதன்.
ஹிட்லரைத் தன்னால் எப்படிக் கொல்ல முடியாமல் போனது..? நான் ஏன் ஹிட்லராக மாறி இருந்தேன்..? அந்த முதியவரும் ஹிட்லரைக் கொல்ல முடியாது என்றுதானே
சொன்னார்.. ஏன்? ஒருவேளை தான் ஹிட்லரைக் கொல்ல
முடிந்திருந்தால் இரண்டாம் உலகப் போர்தான் நடந்திருக்காதே... பொது மக்கள் இலட்சக் கணக்கில் அழிந்திருக்க மாட்டார்கள்...
ஹிட்லரின் கொடுமை பற்றி புத்தகம் எழுதப்பட்டிருக்காது..
தான் அதை வாசித்திருக்க மாட்டோம்... ஆத்திரம் வந்திருக்காது.. ஹிட்லரைக் கொல்ல ‘பர்க்கில்’
ஏறியிருக்க மாட்டோம்.... என்றெல்லாம் யோசித்த கணிதன் யோசனை முடியும் முன்னரே, அந்த முதியவரின், தளத்தில், போய் இறங்கினான். இவனைக் கண்ட முதியவர்,
‘’ஏற்கனவே நான் சொன்னேன்தானே ... இதுதான் ‘பட்டாம்பூச்சி
விளைவு’ என்பது.. நீ அதை உணரவில்லை.. உலகப் போக்கை மாற்ற, உன்னாலும், மற்ற யாராலும் முடியாது..’’
என்று சொன்னார்.. அந்த முதியவரைக்
கண்டு திடீரென அதிர்ச்சியடைந்தான் கணிதன் ..
ஏனெனில் அங்கு முதிய தோற்றத்தில் இருந்தவர் கணிதன்தான்..
00