௦௦௦
2025
55 வயது
பத்மநாதனுக்கு இப்படி நேருமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உயரே பரணில் நின்று, கட்டிடத்தின் மூன்றாம்
மாடிக்கு ‘பெயின்ற்’ அடித்துக் கொண்டிருந்த, பத்மநாதனின் கால்கள் கொஞ்சம் திமிர்த்து
விட்டதால் கால்களை சற்று உதறினான்.
அவ்வளவுதான், சட்டென்று கால்கள் சறுக்கி, நாற்பது அடி உயரத்திலிருந்து ‘’ஹா..அம்ம்மோ’’ என்ற பெருஞ் சத்தத்துடன் தலை
கீழாக வெகு வேகமாக வந்து விழுந்து.. விட்டோமா என்று அவனுக்கே சந்தேகமாகவிருந்தது. ஏனெனில்..
௦௦
விழுந்து கொண்டிருந்த பத்மநாதனுக்கு
பக்கத்தே, வினோதமான உடல் அமைப்புடன் தலையில் ஒரு நீண்ட ஏரியலுடன் ஒருவர்
காட்சியளித்தார்...
‘’யாரையா நீங்க ..?’’ என்று கேட்டான்
பத்மநாதன்..
‘’என்னை உனக்குத் தெரியாது.. நான் ஏலியன்
இனத்தவன்.’’
‘’அப்படி என்றால்..?’’
“நீ மூன்றாம் பரிமாண உலகில், 2025 ஆம், வருடம் ஒரு மூன்றாம் மாடியில் பெயின்ற்
அடித்துக் கொண்டிருந்தாய் அல்லவா..? அந்நேரம் உன் கால் சறுக்கி கீழே விழுந்தாய்..
நீ விழும்போது சரியாக அதே கணப் பொழுதில்,
இரண்டாம் மாடி அருகில் சட்டென
உருவாகிய ஒரு புழுத்துளைக்குள்
வந்து விழுந்தாய்.. நீ இன்னும் தரையை அடையவில்லை.’’
பத்மநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை..
‘’விழுந்தேனா.. இறந்து விட்டேனா..?’’
‘’இல்லை.. நீ இறக்கவில்லை.. அதாவது தரையை
நீ இன்னும் அடையவில்லை.. தரையில் விழுந்த பின் சிலவேளை நீ உடல் சிதறி இறக்கவும்
கூடும்,
அல்லது காயங்களுடன் உயிர் தப்பவும் கூடும்.. இன்னும் அது நடக்க
வில்லை. நீ புழுத்துளைக்குள் விழுந்த போது ‘’ஹா..அம்ம்மோ’’ என்று
அலறியபடியால்,
இக்கணத்தில் இக்கிரக வழியால் உன்னை உன் பத்து வயதுக்கு அழைத்துப் போக நான் வந்திருக்கிறேன்..’’
‘’எனக்குப்புரியவில்லை’’
‘’அதுபற்றி எனக்குக் கவலையில்லை... நீ வந்திருக்கும் தூரம்,
உன் பூமியிலிருந்து 60
இலட்சம் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்ற ஒருபேரடையில் உள்ள ஒரு குக்கிரகம்..
இதற்கு நீ புழுத்துளை வழியாக வர
எடுத்துக் கொண்ட நேரம், உன் கணித முறைக்குள் அகப்படாத அளவு
நுண்ணியது..ஒரு வினாடியை இலட்சக் கணக்கில் பிரித்து வருகிற ஒரு நுண் காலம்’’
‘’எனக்கு நீ சொல்வது ஒன்றும் விளங்கவில்லை’’
‘’அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை..
நான் புழுத்துளை வழியின் காவலாளி.. இவ்வழியாக யாராவது வந்தால் அவர்களை உரிய இடத்துக்கு
ஆற்றுப் படுத்துவதே என் கடமை.. நீ அம்மாவை விழித்துக் கத்தியதால்,
உன் அம்மாவிடம், அழைத்துப் போகிறேன்.. பூமியில் வாழ்நாள் முடிந்து போன உன் அப்பா, அம்மா, மற்றும் உன் ஊரவருடன், உன் கிராமத்தில், 1980 இல்,
நீ பூமியில், பத்து வயதில் வாழ்ந்த அதேநாளில் மீண்டும், இப்போது வாழப்போகிறாய்.’’
‘’அப்போ நான் சிறுவனாக இருப்பேனே?’
‘’1980இல், உன் பூமியில் உனக்கு பத்து
வயதுதானே...அந்நேரம், இருந்த, இடங்கள், சம்பவங்கள், மனிதர்களுடன் நீ இப்போது வாழப் போவதால் உன் 10 வயது நிகழ்ச்சிகளை மட்டுமே
நீ அனுபவிக்க முடியும். இதோ பார்.,
இந்தப் பேரடையின் இந்தக் குக்கிரகத்தில் இருந்து புறப்படும் ஒளி உன்
பூமியை அடைய உன் பூமிக் கணக்கின் படி 45 ஆண்டுகளும் 3 மாதமும் 7 நாட்களும்
ஆகும். எனவே, 45 ஆண்டுகள்
3 மாதம் 7 நாட்களுக்கு முன்பு, அதாவது மூன்றாம் பரிமாணத்தில்,
அதுவும் உன் பூமிக்கணக்கில் ஒருசில மணித்துளிகளுக்குரிய நிகழ்ச்சிகள் மட்டுமே கிடைக்கும்.. ஏனெனில்
விரைவில் பூமியை விட்டும் இக்கிரகம் தன் பாதையை விட்டும் விலகிவிடும்..
அதற்குப்பின் ஒரு வினாடி முந்திய பிந்திய
எதுவும் உனக்கு காணக் கிடைக்காது.’’
‘’இது எந்த இடம்...அதை மட்டும் சொல்லு’’
‘’இது ஒரு இடமில்லை.. ஒரு பாதை..
இப்பாதையில் சென்றால் உனக்கு 10 வயது ஆகிவிடும். பூமியில் நீ 2025ல் விழும்போது, ‘’ஹா..அம்ம்மோ’’ என்று அலறிய ஒலிக்குப்
பொருத்தமான ஒரு காலப்பகுதி உன் 10 வயதுக்
காலம் என்று எங்கள் காலக்கண்ணாடி கணித்துச் சொன்னது. அந்த நேரமும் இதே தொனியில் நீ,
ஒரு தடவை அலறி விழுந்தாய்..
எனவே, ஒலி-ஒளிப் பொருத்தமான இக்காலத்துக்கு
வந்திருக்கிறாய்.. விழும்போது நீ ‘’கண்ணே கமலினி’’ என்று கத்தியிருந்தால்,
இந்நேரம் வேறு ஒரு பாதையால், வேறு ஒரு நிகழ்ச்சிக்கு, சிலவேளை
உன் 20 வயதுக்கு, உன் காதலி கமலினியிடம்
போயிருக்கவும் கூடும்...’’
‘’நான் என் ஒரு வயதுக்குக் கூட செல்ல
முடியுமா..அல்லது 20 வயதுக்கு செல்ல
முடியுமா...? ‘
‘எல்லாம் முடியும் ..நீ விழுகின்ற புழுத்துளைக்குள்
உள்ள கோடாகோடி பாதைகளில், நீ எதில் போய்
விழுகிறாயோ அந்த நேரம் அக்கிரகம், பூமியில் தன் ஒளியைப்
பாய்ச்சிக் கொண்டிருக்கும் காலத்துக்கு போய் சேர்ந்து விடுவாய்..ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக உன்னால் அந்த விதியை தீர்மானிக்க முடியாது...’’
‘’நான் பிறக்க முதல் உள்ள என்
கிராமத்துக்கு போக முடியுமா..’’
‘’முடியும்.. ஆனால் உன்னால் உன்
கிராமத்தைக் காண முடியாது’’
‘’என்ன குழப்புகிறாய்?’
‘’பிறக்கும் முன் எப்படி நீ கிராமத்தைக்
காண முடியும்? பின்வாங்கிச் செல்லும் கிரகங்களில்,
அல்லது முன்னோக்கிச் செல்லும் கிரகங்களில், ஒவ்வொரு கிரகம் கிரகமாக நீ பயணிக்கும்
போது உன் வாழ்க்கை வரலாற்றையே நீ தொடராக
காண்பாய்...இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் எல்லாவற்றையும் ..முக்காலமும் ஒரே காலத்தில் காணக் கிடைக்கும் ‘’
‘’ஒன்றும் புரியவில்லை.. விழுந்தால்தான்
இங்கு வர முடியுமா?
‘இல்லை சிலர் சும்மா நடந்து
கொண்டிருக்கும் போது, அல்லது வயலில் வேலை
செய்து கொண்டிருக்கும் போது,, வாகனம் செலுத்திக்
கொண்டிருக்கும் போது... எந்நேரமும் புழுத்துளைக்குள் நுழைந்து விடக் கூடும்.. யார்,
எப்போது, எங்கே எக்கணத்தில் என்று
சொல்வதற்கில்லை..இலட்சத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கக் கூடும் ’’
‘’ குழப்புகிறாய் நீ..’’
‘’பரவாயில்லை.. இப்போது,
இதோ, 1980 ஆம் வருடத்தைய உன் கிராமம்.. அனுபவித்துக் கொள்..’’
திடீரென அந்த உருவம் மறைய..
௦௦
1980
உடனே, 1980 ஆம் வருட மகிளூர்முனைக் கிராமத்தில் 10 வயது பத்மநாதன் அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு, 5
கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேகலா
தியேட்டருக்கு ‘பில்லா’’ படம் பார்க்க ஓடுகிறான்.. வில்லுக் குளத்தருகே பெரிய பிள்ளையார் ஆலயம்.. அருகே பென்னம் பெரிய
பூவரசு மரம்.. அதன் பாரிய நிழல்.. கரத்தை வண்டியில் விரையும் காத்தான் அண்ணன்..
தாவணிகளோடு கோவிலுக்குச் செல்கிற வதனி, மனோன்மணி, சரசு.....அக்காமார்கள்.. பெரியண்ணனின் தேநீர்க் கடை.. கமகமத்து மணக்கும்
உளுந்துவடையும் தோசையும்... புழுதி
பறக்கும் கண்ணாரத் தெரு.. உபதபால்
அலுவலகம்.. மாணிக்கம் பியோன்.. கந்தையா மாஸ்டரின் தடதட மோட்டார் சைக்கிள்...
மகிளூர்முனை இந்து மகா வித்தியாலயம்... மணி 2 ஆகிறது..சரியாக 2.30க்கு படம் ஆரம்பித்து விடுவார்கள்..
தியேட்டரில், ரஜினி இரசிகர் வரிசையில் கஷ்டப்பட்டு
இடம்பிடித்து, டிக்கட் வாங்கி, நுழைந்து படம்
பார்த்து...... நேரம் போய்விட்டது..
௦௦
பத்மநாதன் ‘பில்லா’ பார்த்து விட்டு வீடு திரும்பினான். சைக்கிளை
தேடிக் களைத்திருந்த அப்பா, நிறை வெறியில் விழுந்து
கிடந்தார்..
அவனது அம்மா,
வீட்டு வாசலில் பயத்துடன்
நின்று கொண்டிருந்தாள். ‘’வாடா குஞ்சா..’ என்று வாஞ்சையுடன் அழைத்தாள்.. ‘’அம்மா.., ம்மோய்.. அப்பா எங்கேம்மா...?
என்று பயத்துடன் கேட்டான் பத்மநாதன்.. ‘’ அடே குஞ்சா.. திருட்டுத்
தனமாக அவர்ர சைக்கிளை எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்று
விட்டு அப்பாவைச் சமாளிக்க என்னிடம்
வந்திருக்கிறாய்.. அந்தா மனிஷன் வெறியில விழுந்து கிடக்கு..’’ என்றாள் தாய்.
பத்மநாதன் பயத்துடன்,
சத்தமில்லாமல் சைக்கிளை உருட்டிக் கொண்டு சுவரில் சார்த்திவிட்டு
வாசலில் இருந்த குடத்தில் குளிர் நீர் கவிழ்த்துப் பருகிவிட்டு அம்மாவிடம் ஓடி
வந்தான்..
‘’ம்மாவ்வ்..அப்பா எழும்பி என்னைக் கேட்டா,
நீதான் என்னைப் பெரியம்மாட வீட்ட ஒரு அலுவலா அனுப்பின எண்டு
சொல்லும்மா..’’ என்று கெஞ்சினான்..
‘’கள்ளப் பண்டி .. நீ படம்
பார்த்ததுமில்லாம நானும் பொய் சொல்லணுமாடா குஞ்சித் தலையா.. படம் பார்க்க ஏதுடா
காசு குஞ்சா?’’
‘’அம்மா..அமா..அம்மோய்’’
‘’சரி..சரி ஓர்ரா டேய்.. போய்
பட்டறைக்குள் போயி இரு.. அவரு எழும்பி சத்தம் போட்டு முடிஞ்சாப் பொறகு வா..ஓடு.’’
oo
பட்டறைக்குள் பதுங்கி இருந்த பத்மநாதன், தியேட்டரில் வாங்கி வந்திருந்த, ஒரு பழைய படத்தின் கதை வசன பாட்டுப்
புத்தகத்தில் மிகவும் இலயித்து விட்டான்.. கடும் இருட்டாகிக்
கொண்டிருந்தது..வாசிக்க முடியவில்லை. திடீரென
அப்பாவின் பெரும் சத்தம் கேட்டது.. அம்மாவும் ஏதோ சமாளிக்கும் சத்தமும்
கேட்டது.. கொஞ்ச நேரத்தில் அப்பா
கொம்பியபடியே புறப்பட்டு எங்கோ, சைக்கிளில் வெளியேறுவதை ஊகிக்க முடிந்தது...
மறுபடியும் குடிக்கத்தான் போவார்..
பட்டறையை விட்டும் வெளியே வந்தான்
பத்மநாதன். நன்றாக இருட்டியிருந்தது.
‘டே.குஞ்சா.. அப்பா வெளிய போறார்.. போய்
கண்ண மூக்க கழுவிட்டு படிடா.. இந்தா தேத்தண்ணி..’’ என்றாள் அம்மா..
பத்மநாதன் தேநீர்
குடித்துவிட்டு, படிக்கும் போது, திடீரென
அப்பாவின் பெரும் குரல் அருகில் கேட்டது..
‘’டே... வைரவனுக்கு பொறந்த வகுறா...கள்ள
நாயே.. ‘’
அப்பா கூரையில் சொருகியிருந்த பிரம்பை
எடுத்துக் கொண்டு இவனைப் பிடிக்க ஓடி
வந்தார். திடீரென கிளாசைக் கீழே போட்டு விட்டு, பாய்ந்து
ஓடிய பத்மநாதன், சட்டென்று வாசற்படியில் கால்கள் சறுக்கி, ‘’ஹா..அம்ம்மோ’’ என்ற பெருஞ்
சத்தத்துடன் தலை கீழாக வெகு வேகமாக, விழுந்.....
௦௦
2025
..... விழுந்தான் 55 வயதுப் பத்மநாதன்..
சனங்கள், அதிர்ச்சியுடன் ‘ஹோ.ஹா’ எனக் கத்தியபடியே பத்மநாதனைச் சுற்றிச் சூழ்ந்தனர்.. விழுந்த
வேகத்தில், கால்கள் உடைந்து, தலை தரையில் அடிபட்டு மூளை சிதறி, அக்கணத்திலேயே உயிர்
இழந்திருந்தான் பத்மநாதன். 0
=====
Srilanka
‘’