Wednesday, June 18, 2025

படியெடுப்பு

படியெடுப்பு

 

‘’முக்கால் மணி நேரமாக சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்..என்னுடைய பிரச்சினையை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை  டாக்டர். ..’’ என்று  ஆத்திரத்தில் எகிறினான் ராஹேல்.

‘’நன்றாகப் புரிகிறது மிஸ்டர்,ராஹேல்.. உன் இணையனை அறிய விரும்புகிறாய் அதானே....’’

‘’ஆம். அதுவும் அதி சீக்கிரமாக...எல்லா விஷயங்களிலும் என் இணையன் என்னை  முந்திக் கொள்கிறான். நான் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த போது என் டீ.என்.ஏ. அட்டையைப் பார்த்து ஏற்கனவே எனக்கு வழங்கபட்டுவிட்டதாகச் சொல்லி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனக்கான ஆதாரப் பணம் நான் இரண்டு தடவை பெற்றதாகக் கூறி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி எத்தனையோ தொல்லைகள்..  நேற்றும் விமான டிக்கட்டுக்கு, கணினியில் ‘புக்’ பண்ணிய போது என் டீ.என்.ஏ அட்டையை பரிசோதித்த அதிகாரி நேற்றே நான் டிக்கட் வாங்கி விமானத்தில் ஏறி விட்டதாக சொன்னான்.. என்னால் டிக்கட் பெற முடியவில்லை..’’

‘’அதெல்லாம்தான் சொல்லிவிட்டாய். நிறுத்து. உன்னைப் போன்ற ‘சைக்கோட்’டுகள்  சிலரால் இது உலகத்தில், இந்த முப்பதாம் நூற்றாண்டில்  ஒரு நவீன பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.. உன் தாயிலிருந்து ஒரு மூலக்கூறை பிரித்து, உன்னைப் போல இன்னொரு உயிரையும்  உருவாக்கியிருக்கின்றனர்.  அந்த உயிரும் வளர்ந்து இப்போது எங்கோ  உன்னைப் போலவே இருந்து கொண்டு வாழ்கிறான். உன் மூலக்கூறின் அதிசயப் படியெடுப்பு அவன்’’

‘’என் இரட்டையனா?’’

“ஏறக்குறைய அப்படித்தான்.. ஆனால், சொற்ப வித்தியாசம் இருக்கலாம்..உன் கண்கள் மஞ்சள்.. அவனது கண்கள் நீலமாக இருக்கலாம். . இப்படி மிகச்சிறிய வித்தியாசம்..’’

இது எப்படி நிகழ்ந்திருக்கும் டாக்டர்?’’

‘’ உன் தாயார் ஏதோ ஒரு சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு  இதற்குச் சம்மதித்திருக்கலாம்.. படியெடுப்பு, மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்பட்டிருக்கலாம் ராஹேல். அவை மூலக்கூறு படியெடுப்பு,, உயிர்படியெடுப்பு, மற்றும் சிகிச்சைக்கான கலப்படியெடுப்பு  அதாவது உயிரணுக்கல மறுவுருவாக்கம்.. துரதிர்ஷ்டவசமாக, நமது  யூதமதம் மட்டுமே இதனை அனுமதித்திருப்பதால் இப்படி  ஒரு ஜெனரேசன் நம் நாட்டில் மட்டுமே வந்து விட்டது.. இதில் நீ எந்த வகையினன் என்று அறிந்து சொல்ல  கொஞ்ச நேரமாகும்....’’

‘’காத்திருக்கிறேன்.. இவன் தற்போது எங்கே இருக்கிறான் என்பதையும் நீங்கள் கண்டுபிடித்துத் தரவேண்டும்.ப்ளீஸ்.’’

‘’முயற்சிக்கிறேன்... சிலவேளை  உன் இணையனும் உன்னைப் போலவே உன்னைத் தேடிக் கொண்டிருக்கலாம் ராஹேல்..’’

‘’ஏன் அப்படி?’’

‘’ஏனெனில், உங்கள் இருவரின் உடலமைப்பு தவிர உணர்வுகளும் ஒரொரு சந்தர்ப்பத்தில் ஒத்தியங்கவும் கூடும்..நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்னியோன்ய அன்பாக இருப்பீர்கள் அல்லது அதீத விரோதிகளாகவும் இருக்க சாத்தியம் உண்டு.. சரி, நீ அவனைக் கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறாய் ராஹேல்?’’

‘’எனக்கான உரிமைகளை, சந்தர்ப்பங்களை இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டு வாழ அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்யலாம் என எண்ணுகிறேன் ..’’ என்றான் ராஹேல். ஆனால் அவனுக்குள் வேறொரு இரகசிய திட்டம் இருந்தது.

௦௦

இவர்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து சுமார் முன்னூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஹைபா  மாநகரத்தின், மரியர் அகல வீதியில், 410 ஆம் இலக்க அடுக்கு மாடித் தொகுதியின்,  72 ஆம் மாடியில் அமைந்திருக்கும்,’’அமைதிக்கான கண்டுபிடிப்பு’’ நிலையத்தின் அறையில், கண்டுபிடிப்பாளர் மீனாஷூவின் முன், நீலநிறக் கண்களுடன்  அமர்ந்திருந்தான் எஸ்தர்.

‘’இலகுவாகக் கண்டுபிடித்து விடலாம் எஸ்தர்..’’  என்ற கண்டுபிடிப்பாளர் மீனாஷூ சொன்னாள், ‘’உன் டீ.என்.ஏ. அட்டையைக் கொடு.. பணமாக  இருபத்திரண்டு லட்சம் ‘பே’  பண்ணு. ‘’

‘’சரி’’

‘’ஏன் அவனைத் தேடுகிறாய் எஸ்தர்..? ஸோர்றி .. இந்தக் கேள்விக்கு நீ பதில் அளிக்கவே வேண்டும். போர்மட்டில் கேட்டிருக்கு’’

‘’அவன் என் சகோதரன். ஒரு போதும் அவனை நான் பார்த்ததில்லை. தவிரவும் என்னுடைய டீ.என்.ஏ. அட்டை 99 சதவீதம் அவனுடையதை ஒத்திருப்பதால் எனக்கு பல வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. திருமணம் முடிக்கக் கூட முடியவில்லை.. இதுபற்றி அவனுடன் பேசி ஒரு முடிவுக்கு வர எண்ணுகின்றேன்..’’ என்று சொல்லிக் கொண்டே தன் நீலக் கண்களை மூடிக் கொண்டான் எஸ்தர்.. கண்களில் பொய்யை கண்டுபிடித்து விடுவாளோ என்ற பயத்தில்...

‘’உன் தாயார் யார்.. என்ன தொழில் செய்தாள்? இதற்கு நீ பதிலளிக்கத்  தேவையில்லை..சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.’’

‘’அவள் யாரென்றே எனக்குத் தெரியாது..இந்த இரட்டையன் எப்படி பிறந்தான் என்றே குழப்பமாக இருக்கு..’’

‘’ஏன் கேட்டேன் என்றால், நீ படியெடு உயிரித் தொழில்நுட்பம் மூலமாகத்தான்  உருவாகியிருக்கிறாய்..’’

அப்படியானால்?’’

‘’உயிரியல்படியெடுப்பு .. அதாவது  மரபியல்  ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரியல் பொருள்களை படியெடுப்பது. உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறை... ஒரு உயிரியல் பொருளிலிருந்து அதனையொத்த உயிரணு அமைப்பை உடையதாய் படியெடுக்கப்பட்டவை படியெடுக்கப்பட்ட உயிரியல்பொருள் எனப்படும். அதுதான் நீ’’

‘’எனக்குப் புரியவில்லை மேடம்’’

‘’சரி அது உனக்குத் தேவையுமில்லை..  பணத்தைக் கட்டி விட்டு வெளியே உட்கார். அழைக்கிறேன்’

௦௦

‘’வாழ்த்துக்கள் ராஹேல்... இதோ நீ கேட்ட தகவல்கள்.. உன் இணையன் பெயர் எஸ்தர்.. படத்தைப் பார்.. நான் சொன்னேனே நீலக் கண்கள் என்று..பார்த்தாயா.. இப்போது அவன், ஹைபா டவுனில்,  மரியர் அகல வீதியில், 410 ஆம் இலக்க அடுக்கு மாடித் தொகுதியின்,  72 ஆம் மாடியில் அமைந்திருக்கும், ’’அமைதிக்கான கண்டுபிடிப்பு’’ நிலையத்தின் அறையில் உட்கார்ந்திருக்கிறான்.. உன்னைத்தான் தேடிக் கொண்டு இருக்கிறானோ தெரியாது..’’

‘’வெரிகுட் டாக்டர். அவனது விலாசம் என்ன..?’’

‘’இதோ’’

‘’மிக்க நன்றி டாக்டர்.. நான் வருகிறேன்..’’

‘’வெல்கம்..பெஸ்ட் ஒப் லக் ‘’

00

 

‘’இதோ எஸ்தர் ... நீ கேட்ட தகவல்கள்.. உன் சகோதரன் பெயர் ராஹேல்.. மோசேயா டவுனில் இருக்கிறான். மற்றும் விபரங்கள் இதில் இருக்கின்றன..’’

என்று ஒரு கோவையை நீட்டினாள் மீனாஷு..

‘’தேங்க்ஸ் மேடம்...என் இரட்டைப்பிறவி பற்றிய தகவல்கள் எனக்கு ஆச்சரியமூட்டுகின்றன’’

‘’இதில் ஓர் ஆச்சரியமுமில்லை எஸ்தர். நீயும் உன் சகோதரனும் நிச்சயமாக சைக்கோட்டுகள்தான்... உனது  தாய் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஒரு ஆணின் தேவையின்றி தனது குழந்தைகளை உருவாக்கிகொண்டிருக்கிறாள்.. சில பக்றீரியாக்களும் இப்படி தன்னிலிருந்தே தன்னை உற்பத்தி செய்வதில்லையா.. அதுதான் சைக்கோட்’’

‘’அப்படியா.. இந்த உலகத்துக்கு ஒருத்தனே போதும்.’’ என்று முணுமுணுத்தபடியே கோவையைப் பெற்றுக் கொண்டு, அவசரமாக வெளியேறினான் நீலநிறக் கண்ணன்  எஸ்தர்.

௦௦

அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.. திறந்து பார்த்த எஸ்தர் அதிர்ந்து போனான். அச்சு அசலாக தன்னைப் போலவே நின்று கொண்டிருந்த ராஹேலை ஆச்சரியமாகப் பார்த்தான்.  

‘’அப்படியானால் என்னைத் தேடிக்கொண்டு வந்து விட்டாய்’’ என்றான் எஸ்தர்.

‘’ஆம் என் சகோதரனே..நமக்கிடையிலுள்ள விவகாரத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்’’

‘நிச்சயமாக.!. வா.. உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.. உள்ளே வா’’

 உள்ளே வந்து அமர்ந்தான் ராஹேல்.. இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கி உறுத்தியது..

‘’என்ன சாப்பிடுகிறாய் என் சகோதரனே’’ என்று கேட்ட எஸ்தர், ‘’புதிய இஸ்ரேலின் புதிய தயாரிப்பு இருக்கிறது.. கொஞ்சம் சாப்பிடுகிறாயா?’’

‘’சரி’’

‘’நம் பிரச்சினையைப் பேசிக் கொள்வோம். இப்போது கொஞ்சம் குடிப்போம். நம் தாய் செய்த தவறுக்காக..’’

என்ற எஸ்தர்  மதுக் கிண்ணங்கள் இரண்டை எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டு,  மீண்டும், புதிய இஸ்ரேலின் புதிய தயாரிப்பை எடுக்க  மற்ற அறைக்குள் சென்றான்.  சென்றவன் அதன் மூடியைத் திருகித் திறந்து,  ஆர்கானிக் விஷத் துளிகளை அதற்குள் விட்டு,  விரைவில் திரும்பி வந்தான்.

‘’அருமையான டிரிங்ஸ் இது சகோதரா..’’ என்றவாறே அதிலிருந்து கொஞ்சம் ஊற்றி ராஹேலிடம் நீட்டினான். தானும் கிளாசில் ஊற்றி வைத்துக் கொண்டான். இருவரும் சியர்ஸ் சொல்லி கிண்ணங்களை முட்டிக் கொண்டனர்.. ராஹேல் கண்ணை மூடிக் கொண்டு மடமடவெனக் குடித்து விட்டு, கிளாசை வைத்தான். எஸ்தர் குடிக்கவில்லை.

‘’ராஹேல்.. கடவுளைப் பிரார்த்தனை செய்து கொள்.. உன் விதி இவ்வளவு விரைவில் தீர்மானிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றான்.

‘’நானும்தான்’’ என்ற ராஹேல் சட்டெனக் கைத்துப்பாக்கியை உருவி எஸ்தரின் தலையில் மூன்று முறை சுட்டான்.  இதைச் சற்றும் எதிர்பார்க்காத எஸ்தர் மூளை சிதறிக் கீழே விழுந்தான்.

அதே வினாடியில் ராஹெலின் வயிற்றுக்குள் ஏதோ தீப்பந்தம் போல் எரிந்து குமட்டிக் கொண்டு வர, வாயிலிருந்து இரத்தம் கொப்பளிக்க தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே கதிரையில் சாய்ந்தான். அந்த இறுதி வினாடியில் இருவரின் கண்களும் ஒருகணம் சந்தித்துக் கொண்டன..0

௦௦