Tuesday, June 3, 2025

பரஞ்சோதியின், பரகாயப் பிரவேசம்

பரஞ்சோதியின், பரகாயப் பிரவேசம்

 

‘’யாருக்கும் கிடைக்காத வெற்றி எனக்குக் கிடைத்திருக்கிறதடா என் நண்பனே....’’ என்று கூறி, பெருமிதத்தில் கசிந்த விழிநீரைத் துடைத்துக் கொண்டார் விஞ்ஞானி பரஞ்சோதி. தன் கையில் ஊர்ந்து கொண்டிருந்த சிவப்புக் கம்பளிப்புழுவை கொஞ்சம் தடவிக் கொடுத்தார்.

அதை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அவரது நெடுங்கால  நண்பரான சட்டத்தரணி சிவானந்தன்,

‘’அட, மட விஞ்ஞானியே..’’ என வியந்து ஆச்சரியப்பட்டார். பின் சொன்னார்,   ‘’அதாவது, transporter எனும், மனிதனின் ஒவ்வொரு அணுவையும் இடம் பெயர்த்து இன்னோர் இடத்துக்கு அனுப்புகின்ற ஓர் ஆராய்ச்சியில் வெகு காலமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாய்.. அதிலேயா வெற்றி கண்டிருக்கிறாய்? இதற்காகவா என்னை இங்கே வரச் சொன்னாய்?’’என்று கேட்டார்.

‘’அட,மக்கு.. அதில்லடா... இது வேறு.. இது teleportation... அதாவது பழைய புராணங்களில் சொல்வார்களே ..கூடுவிட்டுக் கூடு பாய்தல்..தெரியுமா உனக்கு?  அதாவது ஒரு மனிதனின் உடல் அப்படியே ஓரிடத்தில் அசைவற்றுக்  கிடக்க அவனது உணர்வும், ஆன்மாவும், அந்த உடலை விட்டும் வெளியேறி,  வேறொரு இறந்து கிடக்கும், ஒரு உடம்பில் போய் குடியேறுதல்..

‘’ஒரு விஞ்ஞானியாக இருந்து கொண்டு  லூசு மாதிரி உளறுகிறாய்’’

‘இல்லடா.. எனக்கு இதில் முதற்கட்ட  வெற்றி கிடைத்திருக்கிறது..’’

‘’பைத்தியமா உனக்கு?  இதெல்லாம் வெறும் சித்து விளையாட்டு.. சும்மா புராணங்கள் சொல்லும் கப்சா’’

‘’இல்லடா..சித்து விளையாட்டல்ல..சித்தர்களின் கலை... உனக்கு திருமூலரைத் தெரியுமா.. கேள்விப்பட்டிருக்கிறாயா?’’

‘’ திருமந்திரமாலை இயற்றிய திருமூலர்தானே.. ஆளைத் தெரியாது கேள்விப்பட்டிருக்கிறேன்’’

‘’இற்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மெய்ஞ்ஞான சித்தர் பெருமான் திருமூலர்.  அவர்தான் முதன் முதலில் கூடுவிட்டுக் கூடு  பாய்ந்தவர். தன் உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு வேறொரு இறந்த உடலுக்குள் போய் அங்கேயே வாழ்ந்தவர்..இந்த வித்தையை பரகாயம் என்றும் சொல்வதுண்டு.. அதாவது teleportation.. அட்டமா சித்திகளில் இது மகா உன்னதமானது. சிரமமானது. யாராலும் இலகுவில் சித்தி பெற முடியாதது..’’

‘’பைத்தியமாடா உனக்கு.. திருமூலராம் திருமூலர். அந்தாள் எதையோ சொல்ல, நீ அதை பிடித்துக் கொண்டு வேலை மினக்கெட்டு இத்தனை வருஷமாய் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறாய். கொவிட்டுக்கு தடுப்பூசி கண்டு பிடித்த பெருமைக்குரிய நீ முற்றிலும் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனாய்..’’

‘’ ஆனால், வெற்றி கண்டு விட்டேன்.’’ என்று முணுமுணுத்த  விஞ்ஞானி பரஞ்சோதி,  மெதுவாக எழுந்து போய் அலுமாரிக்குள்ளிருந்து ஒரு பழைய நூலை எடுத்துக் கொண்டு வந்தார். பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினார்.

‘’இதைக் கொஞ்சம் படித்துப் பாரேன்.. நீ முடிப்பதற்கிடையில் நான் உனக்கு ஒரு நல்ல கோப்பி தயாரித்துக் கொண்டு வருகிறேன்’’

            சிவானந்தன், அவர் காட்டிய பக்கத்தைப் படிக்கத் தொடங்கினார்..

௦௦

‘’........ ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் சர்பம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

 எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.

சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

௦௦

‘’இந்தா, கோப்பி.. குடி’’

‘’அட என் மக்கு விஞ்ஞானியே.. இதையாடா நீ ஆராய்ந்து வெற்றி கண்டாய்.. என்ன உன்னால் இப்படிக் கூடு விட்டுக் கூடு பாய முடியுமாடா...’’

‘’சந்தேகமில்லாமல்... இதற்கான முதற்கட்ட வெற்றியை அடைந்து விட்டேன்.. உண்மையாகவே.. இதைப் பார்த்தாயா... ?’’

            மேசைமீது செத்துப் போய்க் கிடந்த இன்னொரு சிவப்புக் கம்பளிப் புழுவைக் காட்டினர் விஞ்ஞானி பரஞ்சோதி.. ‘’ நேற்று இந்தப் புழுவின் உள்ளே மூன்று நிமிஷம் நான் வாழ்ந்தேன்’’

‘’அடப் பேயா..லூசா...’’ சட்டெனக் கதிரையை விட்டும் எழுந்தார் சட்டத்தரணி சிவானந்தன்.. அவரது உடல் வெடவெடத்து நடுநடுங்கியது..

‘’உண்மையாடா நீ சொல்வது? நான் இதை கடைசிமட்டும் நம்ப மாட்டேன்..’’

“சந்தேகமில்லாமல் உண்மை.. இப்போது நான் இதை உனக்கு செய்து காட்டப் போகிறேன்..பார்க்கிறாயா..?  இந்த பரிசோதனையில், ஒரு மூன்று நிமிடம் மட்டுமே நான்  அந்தப் புழுவின் உள்ளே வாழ முடிகிறது.... அங்கு வாழ்நாளை நீடிக்கும் முயற்சியில் மும்முரமாய் இருக்கிறேன்.. இந்த ஆராய்ச்சியின் பெறுபேற்றை நான் சட்டரீதியாக அணுகும் வண்ணம் இதன் காப்புரிமையை தயாரித்து தரும் பெரிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கத்தான் உன்னை இங்கு அழைத்தேன்’’

‘’நீ செய்வது சட்டவிரோதம்’’

‘’சட்டபூர்வமாக்கத்தானே உன்னை அழைத்தேன்.’’

‘’என்னால் முடியாது.. நன்றாக யோசித்துப் பார்.. நீ ஒரு காலத்தில் வேறே  ஏதாவது ஓர்  உடலில் புகுந்து வந்து யாரையாவது கொலை செய்து விட்டு உன் சுயத்துக்கு மீண்டால்...? சட்டப்படி உன்னை யாராலும் தண்டிக்க முடியாது போகும்.. என்னை மன்னித்து விடு, இது என்னால் முடியாது..’’  என்று கூறிவிட்டு விரைவாக எழுந்து வெளியேறினார் சட்டத்தரணி சிவானந்தன்.

‘’கொஞ்சம் பொறு.. இதைப் பார்க்காமல் போகிறாயே..’’

‘’என்னது?  இப்போ நீ கூடு விட்டு கூடு பாயப் போகிறாயா?’’

‘’ஏன் மாட்டேன்? நீ, என் பால்ய வயது முதலே நண்பன். உன்னிடம் இதைக் காட்டாமல் யாரிடம் காட்டுவேன்.. சற்று இப்படி இரு..’’

‘’இந்தப் புழுவுக்கு உள்ளேயா..?’’

‘’ஆம், இது சாதாரண புழு இல்லை..இது  சிவப்பு கம்பளிப்புழு...அம்சாக்டா லாக்டீனியா என்பது இதன் விலங்கியல் பெயர்.. முட்டையிலிருந்து புழுவாகி,பூச்சியாகி உருவும் அருவும் மாறுகிற விசித்திர உயிரினம் இது.. இதற்குள் புகுந்து பின் மீள்வது சுலபம் நண்பா.. ‘’

பயத்துடனும் ஒரு விசித்திர ஆர்வத்துடனும் கதிரையில் அமர்ந்தார் சிவானந்தன். விஞ்ஞானி பரஞ்சோதி தன் கையில் ஊர்ந்து கொண்டிருந்த அந்த இன்னொரு சிவப்புக் கம்பளிப்பூச்சியை மேசையில் வைத்தார்.  அதன் தலையை நன்றாக மூடி,  மூச்சுத் திணறச் செய்து, சாகடித்தார்..  சற்று நேரம்  அதையே பார்த்துக் கொண்டிருந்தார்..

‘’நண்பா....இப்போது, இந்தப் புழு செத்து விட்டது.. நான் சற்று அந்த அறையில் போய் இருக்கிறேன். பயப்படாதே... நீ  எக்காரணம் கொண்டும் அந்த அறைக்குள் வந்து விடாதே.. சற்று நேரத்தில் நான் இந்தப் புழுவுக்குள் நுழைந்து உன்னை அழைக்கிறேன்..பார்..’’

என்ற விஞ்ஞானி பரஞ்சோதி ஒரு வெற்றிப் பார்வையுடன் தன் பிரத்தியேக அறைக்குள் நுழைந்து மறைந்தார்.. சிவானந்தன் வெலவெலத்துப் போய் பயத்துடன் மேசை மீது செத்துக் கிடந்த அந்தப் புழுவையே இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்..

            ஒரு ஐந்து நிமிடத்தில், திடீரென அந்தப் புழுவின் உடலில் ஒரு அசைவு தென்பட்டது.. பயத்தில் திடுக்கிட்டு எழுந்தார் சிவானந்தன்.. தொடர்ந்து, இறந்து கிடந்த அந்தப் புழு மெல்லக் கண் விழித்து உடலைச் சுருட்டி, பின் மீண்டும், உடலை நீட்டிச் சுருக்கி இவரை நோக்கி நகர்ந்து வந்தது.  

‘’ஆ’’ என்று கத்திய சிவானந்தன், விஞ்ஞானி புகுந்த அறையை நோக்கி ஓடி கதவைத் திறந்தார். அங்கே, கட்டிலில் ஆடாது அசையாது, தலையில் ஒரு  நீள் வட்டமான இனம் புரியாத ஒரு கருவியைப் பொருத்தியபடி, படுத்துக் கிடந்தார் பரஞ்சோதி.. 

‘’டேய்..பரஞ்சோதி...பரஞ்சோதி’’ என்று, பயத்துடன் இரைந்து  கத்தினார் சிவானந்தன்.. அவரைப் பிடித்து உலுக்கினார்.. ஆனால், விஞ்ஞானி  நிச்சயமாக இறந்திருந்தார்... உடல் விறைத்திருந்தது..

‘’என்ன முட்டாள்தனம் இது..’’

பயந்து போன சிவானந்தன் வெளியே ஓடி, வந்தார்.. மேசைமீது கிடந்த புழு இப்போது தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. அப்போதுதான்,யாரும்  எதிர்பாராத அந்த விடயம் நடந்து விட்டது.

தரையில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த புழுவை, கவனிக்காத சிவானந்தனின் கால்களில் சர்ரக்கென மிதிபட்டு நசுங்கி....

௦௦

விஞ்ஞானி பரஞ்சோதி, தரையிலும், அவரது அறையிலுமாக இறந்து கிடந்தார்.

௦௦ 

No comments:

Post a Comment